தமிழர்களால் தோற்றேன் என்று மகிந்த சொன்னது ஏன்?

Written by Sugumar   // January 12, 2015   //

Rajapaksa_AFP1செத்தும் கொடுப்பர் சிலர். இன்னும் சிலர் செத்தும் கெடுப்பர். உலகம் எல்லா விதமான மனிதர்களையும் கொண்டுள்ளது. தனியாள் வேறுபாடுகளுக்குள் இருக்கக் கூடிய குணவியல்புகள் மிகப் பெரிய வியப்புகளைத் தரவல்லன.

எதுவாயினும் இந்த உலகம் இயற்கையின் நியதிக்கு உட்பட்டது. எதற்கும் ஒரு தீர்ப்பு உண்டு. அத் தீர்ப்புக்காக காத்திருப்பது கட்டாயமானது. இது காலத்தின் கட்டளை என்று கூறலாம்.

இயற்கை, இறைவன் வழங்கும் தீர்ப்பு என்பது எந்த மனிதர்களாலும் வெல்ல முடியாதது.

அத்தகைய தீர்ப்புக்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தீர்ப்புகள் இல்லையாயின் இறைவன் இல்லை என்றாகி விடும்.

கடந்த 8ந் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச­ தோல்வி கண்டார். தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் போது மகிந்த கொண்டிருந்த மகிழ்வுக்கு எல்லையில்லை.

தனக்கு ஈடிணை யாரும் இல்லை என்பதன் நினைப்பே அதற்குக் காரணமாக இருந்தது. கடவுள் மீதும் சோதிடத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதில் எந்தத் தவறுமில்லை.

அவை தேவையானவை. அதேநேரம் நாம் செய்யும் பாவம், பழிகள் நம்மையும் நம் சுற்றத்தையும் சூழும் என்ற உண்மையையும் அறிந்திருத்தல் வேண்டும்.

ஊழ்வினை வந்துறுத்தும் என்ற தத்துவத்தை உணராமல், திருப்பதிக்குச் சென்று ஏழு மலையானை வழிபட்டால் மட்டும் போதுமா? என்ன? திருப்பதியான் ஆட்சி தலைவர்களுக்கான கடவுள் அன்று. அவன் சாதாரண ஏழை மக்களின் இதயங்களில் குடியிருக்கும் கருணைக்கடவுள்.

எனவே கடவுள் மீதான நம்பிக்கைகளுக்கு அப்பால், தர்மவாழ்வு வாழப் பழகுவது மிகவும் அவசியம் என்ற உண்மையை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந்த உலகிற்குப் போதித்து நிற்கின்றது.

தோல்விகள் தான் பலருக்கு ஞானத்தைக் கொடுத்தது. எனினும் தோல்வியிலும் ஞானத்தை உணராத சூனியங்கள் இருக்கவே செய்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்ச­ தனது சொந்த இடமான அம்பாந்தோட்டைக்குச் சென்றார்.

தனது தோல்விக்குக் காரணம் தமிழர்களே! என்று அவர் பகிரங்கமாக கூறியிருந்தார்.

மகிந்தவின் தோல்வியால் கடுப்படைந்துள்ள ஆதரவாளர்களிடம்; எனது தோல்விக்குக் காரணம் தமிழர்களே! என்று கூறுவதன் மூலம், தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது சொன்னவரின் உள்நோக்கமாக இருந்ததா? என்ற சந்தேகம் ஏற்படுவது நியாயமே.

பொதுவில் தேர்தல்கள் நடைபெறும் போது வெற்றியும் தோல்வியும் ஏற்கப்பட வேண்டிய முடிவுகள்.

தேர்தலில் தோற்றவர்கள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம் என்று கூறுவதே வழமை. அதுவே ஒரு தலைவனுக்கு அழகு. ஆனால் மகிந்த ராஜபக்­ச அப்படி எதுவும் சொல்லவில்லை.

மாறாக தமிழர்கள் என்னைத் தோற்கடித்து விட்டனர் என்றே அவர் கூறியிருந்தார். அவ்வாறு கூறியிருப்பதற்குள் தமிழர்களுக்கு எதிரான குரோதத்தை சிங்களவர்களிடம் ஏற்படுத்துவது மகிந்த ராஜபக்­சவின் எண்ணமா? என்று கேள்வி எழுவதில் தவறில்லை.

எதுவாயினும் தமிழர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்று மகிந்த கூறிய போதிலும் அவரின் ஆதரவாளர்கள் அதுபற்றி கோபம் கொள்ளவில்லை.

இதன் அடிப்படையில், சிங்கள மக்கள் பேரினவாத நோயில் இருந்து குணம் அடைந்து வருகின்றனர் என்று உணர முடிகிறது.


Similar posts

Comments are closed.