வெற்றிகரமாக “டிரா” செய்த இந்தியா: ஆட்ட நாயகன் விருதை தட்டிய ஸ்மித்

Written by Sugumar   // January 10, 2015   //

ind_aus4th_006சிட்னி டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி போராடி “டிரா” செய்துள்ளது.

இந்தியா– அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 475 ஓட்டங்கள் குவித்தது. 97 ஓட்டங்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா நேற்றைய 4–வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

இதனால் அவுஸ்திரேலியா 348 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

இன்று (சனிக்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடாமல் அதே ஓட்டங்களில் ‘டிக்ளேர்’ செய்தது.

இதனால் 90 ஓவர்களில் இந்தியாவுக்கு 349 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முரளி விஜய்யும், ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த ராகுல் 16 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

2–வது விக்கெட்டுக்கு முரளி விஜய்யுடன் ரோகித்சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியது.

சிறப்பாக ஆடி வந்த ரோகித்சர்மா 39 ஓட்டங்களில் வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரது கேட்சை சுமித் அபாரமாக பிடித்தார். 90 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் இந்த ஓட்டங்களை எடுத்தார்.

அடுத்து அணித்தலைவர் விராட் கோஹ்லி களம் இறங்கினார். மறுமுனையில் இருந்த முரளிவிஜய் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 135 பந்தில் 50 ஓட்டங்களை (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

சிறப்பாக ஆடி வந்த முரளிவிஜய் 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கோஹ்லி 46 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 201 ஆக இருந்தது.

அதை தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. 217 ஓட்டங்களில் 7 விக்கெட்டை இழந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது 11.4 ஓவர் எஞ்சி இருந்தது.

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த ரகானே பொறுப்புடன் விளையாடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றினார். அவருக்கு புவனேஸ்வர்குமார் உதவியாக இருந்தார்.

இந்திய அணி போராடி ‘டிரா’ செய்தது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 89.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்கள் எடுத்தது.

சிட்னி டெஸ்ட் ‘டிரா’ ஆனதன் மூலம் அவுஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

சிட்னி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்மித் தட்டிச்சென்றார்.


Similar posts

Comments are closed.